'அடல்ட்' கேள்விகள்... அழகாக 'டீல்' செய்யுங்கள்!
சா.வடிவரசு
குழந்தைகள்
கேட்கும் தர்மசங்கடமான 'அடல்ட்’ கேள்விகளுக்கு பதில் அளிக்கும் பக்குவம்
பற்றி 23.10.12 தேதியிட்ட இதழில் ' 'ஃபர்ஸ்ட் நைட்’னா என்னம்மா..?’ என்ற
தலைப்பிலான கட்டுரையில் பேசியிருந்தார், எழும்பூர் குழந்தைகள் நல
மருத்துவமனையின் குழந்தைகள் மனநல நிபுணர் பி.பி.கண்ணன். பச்சிளம்
குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவர் செல்வராஜ், குழந்தைகள் கேட்கும்
அதுபோன்ற இன்னும் பல கேள்விகளையுயும், சூழல்களையும் கடக்கும் பக்குவம்
பற்றி விரிவாகப் பேச ஆர்வத்துடன் முன் வந்தார்.
''ரொம்பப்
பேசுறான் டாக்டர். கேட்குற கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்ல முடியல...
என்பதுதான் இந்தத் தலைமுறை பெற்றோரின் புகாராக இருக்கிறது. அதுவும் அந்தக்
கேள்விகள் 'அடல்ட்’ கேள்விகளாக இருந்துவிட்டால் அவ்வளவுதான்...
பெற்றோர்களுக்கு பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஆனால், அது சுலபமாக
கையாளக்கூடிய சூழலே!'' என்ற டாக்டர், பொதுவாக பள்ளிக் குழந்தைகள் அடிக்கடி
கேட்கும் சில 'அடல்ட்’ கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் விதத்தைப்
பேசினார்...
''ஃபர்ஸ்ட் நைட்னா என்னம்மா?'' -குழந்தையின்
இந்தக் கேள்விக்கு, 'கல்யாணம் ஆனதுக்கு அப்புறம் வர்ற முதல் நைட்தான்,
ஃபர்ஸ்ட் நைட்’ என்ற சிம்பிளான ஒரு பதில் போதும். சில குழந்தைகள் விடாமல்,
'அப்ப என்னம்மா செய்வாங்க?’ என்று கேட்பார்கள். 'அங்கிளும் ஆன்டியும்
அதுக்கு முன்ன நேர்ல பேசியிருக்க மாட்டாங்க. அன்னிக்குதான் நிறைய
பேசுவாங்க, அவங்களோட லைஃப் பத்தி பிளான் பண்ணுவாங்க’ என்று வயதுக்கு
ஏற்றமாதிரி விளக்கம் சொல்லலாம்.
அதேபோல, 'காதல்னா என்ன..?’என்று கேட்டால்,
'உனக்கு சாக்லேட், டாய்ஸ் பிடிக்கும்ல. அதேபோல ஒரு அங்கிளுக்கு ஒரு
ஆன்டியை பிடிச்சா, அல்லது ஆன்டிக்கு அங்கிளை பிடிச்சா... அது காதல், அன்பு,
பிரியம்!’னு சொல்லலாம். இந்தக் கேள்வியை 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள்
கேட்டா, 'ஒரு ஆணுக்கு ஒரு பெண் மீது 25 வயதுக்கு அப்புறம் வர்றதுதான்
உண்மையான காதல்!’னு அடிக்கோடிட்டு சொல்லலாம்.
'குழந்தை எப்படிம்மா பொறக்குது?’ -
இது அடுத்த கேள்வி. 'கல்யாணம் ஆனவொடன, அந்த அம்மாவுக்கும் அப்பாவுக்கும்
கடவுள் குழந்தை கொடுப்பார் (அல்லது இயற்கை, குழந்தையைக் கொடுக்கும்).
அந்தக் குழந்தை 10 மாசமா அம்மா வயித்துக்குள்ள கொஞ்சம் கொஞ்சமா வளரும்.
அப்புறம் அது பெருசாயிடும், இடம் பத்தாதுல... வயித்துல இருந்து வெளிய
வந்துடும்!’ என்று சொல்லுங்கள்.
'எய்ட்ஸ்னா என்னம்மா..?’ என்று
கேட்டால், 'ஹெச்.ஐ.வி-னு ஒரு கிருமியால ஏற்படற நோய். நாம சுத்த பத்தமா
இல்லாம இருந்தா, எய்ட்ஸ் நோய் வரும்!’ என்ற அடிப்படை விளக்கம் 10 வயதுவரை
போதுமானது.
டி.வி-யில்
பார்க்கும் பார் காட்சிகள், பக்கத்து வீட்டுக்காரர் அல்லது உறவுக்காரர்
குடித்துவிட்டு சலம்புவதைப் பார்த்து குழந்தைகள் கேள்வி கேட்டால், 'அது
கெட்ட தண்ணி. அதைக் குடிச்சா, கெட்ட சந்தோஷம்தான் கிடைக்கும். ஹெல்த்
எல்லாம் கெட்டுப்போயிடும். அதனால அதை எப்பவுமே குடிக்கக் கூடாது!’ என்று
சொல்லிக் கொடுங்கள்'' என்றவர்,
''பொதுவாக
குழந்தைகள் தங்கள் பெற்றோர் மற்றும் டீச்சரிடம்தான் முதலில் தங்கள்
கேள்விகளை கட்டவிழ்த்துவிடுவார்கள். அதற்கு அவர்களைத் திருப்திப்படுத்தும்
விதமாக பதில் சொன்னால்தான், தங்களின் உலகத்தை தொடர்ந்து அவர்கள் உங்களிடம்
பகிரப் பழகுவார்கள். ஒருவேளை தங்களுக்குப் பதில் கிடைக்காமல் போனாலோ,
பதிலுக்குப் பதிலாக பெற்றோர் டென்ஷன் ஆனாலோ, பக்கத்து வீட்டு அங்கிள்,
ஆன்டி, டிரைவர் என்று பதில் தேட ஆரம்பிப்பார்கள்.
குழந்தைகளுக்கு
எதிரான பாலியல் வன்முறைகள் மலிந்து கிடக்கும் இந்தக் காலத்தில், 'ஃபர்ஸ்ட்
நைட்’னா என்ன அங்கிள்?’ என்று ஏழு வயதுப் பெண் குழந்தை வீட்டு டிரைவரிடம்
கேட்பதில் உள்ள விபரீதத்தைப் புரிந்துகொண்டு, குழந்தைகளின் கேள்விகள்
எப்போதும் பெற்றோரை நோக்கியே மடை திறக்கும் சூழலை நீங்கள்தான் உருவாக்க
வேண்டும்'' என்ற டாக்டர்,
''சில
குழந்தைகள் ஃப்ரெண்ட்ஸ், பக்கத்து வீடு என்று வெளிப்பழக்கத்தில் சிலசமயம்
கெட்ட வார்த்தை கற்று வந்து வீட்டில் பேசுவார்கள். அதைக் கேட்டவுடன்
குழந்தையைத் திட்டுவதோ, அடிப்பதோ வேண்டாம். அது பண்பற்ற வார்த்தை
என்பதையும், அவ்வாறான வார்த்தைகளைப் பேசுபவர்களை மற்றவர்களுக்குப்
பிடிக்காமல் போய்விடும் என்றும் விளக்கமாகச் சொல்லுங்கள். மேலும் குழந்தை
யாரிடமிருந்து அந்த வார்த்தையை கற்றுக்கொள்கிறதோ, அவர்களிடம் குழந்தை முன்
அதுபோன்ற வார்த்தைகளைப் பேச வேண்டாம் என்று சொல்வதுடன், அவர்களின்
பழக்கத்தையும் தவிருங்கள். சக குழந்தைதான் உங்கள் குழந்தைக்கு அந்த
வார்த்தைகளைக் கற்றுக் கொடுக்கிறது என்றால், அதன் பெற்றோரிடம்
முறையிடுங்கள். தங்கள் பிள்ளை பற்றி சொல்வதை அவர்கள் விரும்பமாட்டார்கள்
என்றாலும், சொல்வது உங்கள் கடமை'' என்றார் அழுத்தமாக.
தொடர்ந்தவர்,
''அதேபோல ஐந்து வயதுக்குள்ளேயே குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச்
போன்றவற்றைக் கற்றுத் தர வேண்டும். 13 - 19 வயதிலான காலகட்டம்,
குழந்தைகளுக்கும் பெற்றோர்களுக்கும் ரொம்பவே சிக்கலான காலகட்டம். இந்த
வருடங்களில் குழந்தைகள், பெற்றோர்கள் எது சொன்னாலும் கேட்க மாட்டார்கள்.
அது வயதின் கோளாறு. அதைப் புரிந்துகொள்ளாமல் மேலும் மேலும் கோபப்பட்டு
பெற்றோர்கள் பிள்ளைகளுக்குப் பிடிக்காமல் போகும்படி நடந்து கொள்ளக்கூடாது.
அவர்களின் ஹார்மோன் கோபங்களைப் பொருட் படுத்தாமல், அன்பை மட்டுமே தொடர்ந்து
தந்து கொண்டிருக்க வேண்டும்'' என்று அழகாக முடித்தார் டாக்டர் செல்வராஜ்!
No comments:
Post a Comment